ஷில்லோங்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள கோங்தொங் என்ற கிராமத்தில் பயண வழிகாட்டியாகப் பணிபுரிகிறார் 24 வயது அம்பிலா கொங்ஜீ.
இவர் பயணிகளுக்கு இல்லங்களில் தங்குவசதி செய்துதர திட்டமிட்டு வருகிறார்.
இந்தத் திட்டம் கோங்தொங்குக்கு அங்கு முன்னோர்கள் நினைவாக பாடப்படும் மெல்லிசைப் பாடல்களைக் கேட்க வரும் பயணிகளுக்கு மேம்பட்ட கிராமப்புற அனுபவத்தை வழங்கும் என்று அவர் கூறுகிறார்.
இங்கு வசிக்கும் கிராமவாசிகள் தங்கள் தாயார் பாடும் தனிப்பாடல்களுக்கு சிறப்புப் பெயர்கள் வைத்துள்ளனர். இந்தப் பெயர்களைக் கொண்டே அவர்கள் வெளி உலகத்துடன் தொடர்பு கொள்கின்றனர்.
“கூ கூ து கூ” என்று ஒரு தாயார் தமது பிள்ளையை கிராமத்தின் முக்கிய சாலையில் நின்று அழைப்பதை பார்க்கலாம். அதைத் தொடர்ந்து அந்தத் தாய் தமது பிள்ளையை, காசி எனப்படும் அவர்களது உள்ளூர் மொழியில், வீட்டிற்கு வரச் சொல்வதைக் கேட்கலாம்.
இங்கு வசிக்கும் ஒருவர் கடந்த 2021ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை வைத்து ஒரு மெல்லிசைப் பாடலை உருவாக்கினார். இந்தியப் பிரதமரின் பாரதிய ஜனதா கட்சி மேகாலய மாநிலக் கூட்டணி அரசில் அங்கம் வகிப்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
இந்த தனிச் சிறப்பு வாய்ந்த பாரம்பரியம் இந்த கிராமத்திற்கு பல பயணிகளை ஈர்த்துள்ளது. இந்த சிறிய கிராமத்தில் கிட்டத்தட்ட 700 பேர் வசிக்கின்றனர். இவ்விடத்தை மேகாலயா மாநில தலைநகர் ஷில்லோங்கில் இருந்து காரில் மூன்று மணிநேரத்தில் சென்று அடையலாம்.
உலகப் பயணத்துறை கழகம் கலாசாரம், பாரம்பரியம், உயிர்பன்முகத்தன்மை ஆகியவற்றைப் போற்றும் கிராமங்களுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்குகிறது. அந்தத் திட்டத்துக்கு இந்த இந்திய கிராமம் 2021ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது.

