உச்ச நீதிமன்றத்தில் குரல் உயர்த்தி பேசிய வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி எச்சரிக்கை

1 mins read
492b3b2b-1f93-43c6-84de-11bbd859165a
படம்: - இந்திய ஊடகம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் புதன்கிழமை வழக்குகளை விசாரித்து கொண்டிருந்தார். அப்போது மனுக்களை பட்டியலிடுவது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் சத்தமாக தனது கருத்தைத் தெரிவித்தார். அதை பார்த்த தலைமை நீதிபதி சந்திரசூட் அதிர்ச்சி அடைந்து, வழக்கறிஞரைக் கண்டித்தார்.

வழக்கறிஞர் குரலை உயர்த்திப் பேசிக் கொண்டிருந்தபோது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “ஒரு நிமிடம், உங்கள் குரலை சற்று குறைத்துப் பேசுங்கள். இந்த நீதிமன்றத்தில் மரியாதையுடன் பேசுங்கள். நீதிமன்றத்துக்கு உள்ள கண்ணியத்துடன் பேசுங்கள். உச்ச நீதிமன்றத்தின் முதல் அமர்வுக்கு முன்னால் நீங்கள் பேசுகிறீர்கள் என்பதை மறக்காதீர்கள். கூச்சலிடாமல் பேசுங்கள். அல்லது உங்களை இந்த நீதிமன்ற அறையில் இருந்து வெளியேற்றுவேன்.

“நீங்கள் எந்த நீதிமன்றத்தில் வழக்கமாக முன்னிலையாவீர்கள்? அங்கு நீதிபதிக்கு முன்பு ஒவ்வொரு முறையும் இப்படித்தான் கத்துவீர்களா? நீதிமன்ற அறையில் அதற்குரிய விதிமுறைகளின்படி நடந்து கொள்ளுங்கள். எங்களை அச்சுறுத்தலாம் என்று நினைத்து குரலை உயர்த்திப் பேசினால், அது உங்கள் தவறு. இதுபோல் கடந்த 23 ஆண்டுகளில் நடந்ததில்லை. கடந்த ஆண்டு எனது பணியின் போதும் இதுபோல் நடந்ததில்லை,” என்று கோபமாக எச்சரித்தார்.

இதையடுத்து, தலைமை நீதிபதியிடம் அந்த வழக்கறிஞர் மன்னிப்பு கோரினார். அதன்பிறகு மிகவும் பவ்வியமாக தனது தரப்பு கருத்துகளை வழக்கறிஞர் எடுத்துரைத்தார். அவரது பெயர் வெளியிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்