தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெலுங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் உடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் சந்திப்பு

2 mins read
44f57243-ae77-4c85-96cb-42d6f9eed9a0
படம்: - இந்திய ஊடகம்

ஹைதராபாத்: தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவை, ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்து நலன் விசாரித்தார்.

தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ், கடந்த மாதம் தனது பண்ணை வீட்டில் இருந்தபோது கீழே விழுந்ததில் அவரது இடுப்பில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த டிசம்பர் 8ஆம் தேதி அவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த அவர், உடல்நிலை தேறியதை அடுத்து ஹைதராபாத்தின் நந்தி நகரில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினார்.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வியாழக்கிழமை கே.சந்திரசேகர ராவை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க அவரது வீட்டுக்குச் சென்றார். அவரை, சந்திரசேகர ராவின் மகனும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமாராவ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் வரவேற்றனர். படுக்கையில் ஓய்வில் இருந்து வரும் சந்திரசேகர ராவைச் சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி, அவருக்கு பூங்கொத்து கொடுத்து விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்து தெரிவித்தார்.

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா அரசியல் குறித்தும் இருவரும் விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு, சந்திரசேகர ராவ் வீட்டில் ஜெகன்மோகன் ரெட்டி மதிய உணவு சாப்பிட்டார்.

ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ். வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதோடு, தனது ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியையும் காங்கிரஸ் கட்சியோடு இணைத்தார். தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், இந்த இணைப்பு நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வு தெலுங்கானா அரசியலில் மட்டுமல்லாது, ஆந்திரப் பிரதேச அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்நிலையில், கே.சந்திரசேகர ராவ் - ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு நடந்திருப்பது கவனிக்கத்தக்கது.

குறிப்புச் சொற்கள்