ஹூப்ளி கைது நடவடிக்கையில் பாஜக தவறான தகவலைப் பரப்புகிறது: காங்கிரஸ்

ஹூப்ளி கைது நடவடிக்கையில் பாஜக தவறான தகவலைப் பரப்புகிறது: காங்கிரஸ்

2 mins read
b4ad1981-19ca-4639-bf59-8b9d067a2e0a
கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே. சிவகுமார். - கோப்புப்படம்

பெங்களூர்: ஹூப்ளியில் நடந்த கைது நடவடிக்கையில் பாஜக தவறான தகவல்களைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டி காங்கிரஸ் கட்சி பெங்களூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

1992ம் ஆண்டு அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து கர்நாடகாவின் ஹூப்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக ஸ்ரீகாந்த் பூஜாரி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு பதியப்பட்டு 31 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்ரீகாந்த் பூஜாரி என்பவர் கைது செய்யப்பட்டார்.

நிலுவையில் உள்ள பழைய வழக்குகளைத் தூசு தட்டி மீண்டும் நடவடிக்கை எடுப்பது வழக்கமான ஒன்றுதான் என்றும், அதன் அடிப்படையிலே ஸ்ரீகாந்த் பூஜாரி கைது செய்யப்பட்டதாகவும் ஹூப்ளி-தார்வாட் காவல் ஆணையர் ரேணுகா சுகுமார் தெரிவித்திருந்தார்.

அயோத்தி ராமர் கோயிலில் வரும் 22ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், கர்நாடகாவில் கரசேவகரான ஸ்ரீகாந்த் பூஜாரி கைது செய்யப்பட்டிருப்பது பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம் சாட்டி வருகிறது பாஜக. மேலும் அது தொடர்பாக கடந்த புதன்கிழமை ஹூப்ளியிலும், பெங்களூருவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் கோஷமிட்டனர்.

பாஜகவின் ஆர்ப்பாட்டங்கள் குறித்து பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார் கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே. சிவகுமார்.

அப்போது அவர், “1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து ஹூப்ளியில் நடந்த கலவரத்தில் தொடர்புடையதாக ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இது சட்டப்படியான ஒரு நடவடிக்கைதான். இதில் அரசியல் பழிவாங்கல் எதுவுமில்லை. சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். சமூக விரோதச் செயல்களை கர்நாடகா ஒருபோதும் அனுமதிக்காது,” என தெரிவித்தார்.

இந்நிலையில், ஸ்ரீகாந்த் பூஜாரி கைது விவகாரத்தில் தவறான தகவல்களை பாஜக பரப்புவதாகக் குற்றஞ்சாட்டி பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர், பாஜகவுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

குறிப்புச் சொற்கள்