நேப்பாளத்தில் இருந்து 10,000 மெகாவாட் மின்சாரம் பெறுவதற்கு இந்தியா ஒப்பந்தம்

நேப்பாளத்தில் இருந்து 10,000 மெகாவாட் மின்சாரம் பெறுவதற்கு இந்தியா ஒப்பந்தம்

1 mins read
c539624f-a45c-496d-b5fc-f50ba9bd6997
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காத்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார்.  - படம்: இந்திய ஊடகம்

காட்மாண்டு: நேப்பாளத்திடம் இருந்து அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் மின்சாரத்தை வாங்குவது உட்பட பல ஒப்பந்தங்களில் இந்தியாவும் நேப்பாளமும் வியாழக்கிழமை கையெழுத்திட்டன.

நேப்பாளத்துக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், அந்நாட்டு எரிசக்தி, நீா்வளம், பாசனத் துறை அமைச்சா் சக்தி பகதூா் பாஸ்நெட் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

நேப்பாளத்திடமிருந்து தற்போது 450 மெகாவாட் மின்சாரத்தை இந்தியா இறக்குமதி செய்துவரும் நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் அதை 10,000 மெகாவாட் ஆக அதிகரிக்க இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும்.

நேப்பாள அதிபா் ராம்சந்திர பவ்டேல், பிரதமா் புஷ்ப கமல் தாஹால் என்ற பிரசண்டா, வெளியுறவு அமைச்சா் என்.பி.சௌத் ஆகியோரையும் அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்பின்போது, பருவநிலை மாற்ற சவால்கள், நீா்மின் வளா்ச்சி ஆகிய துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பின் தேவையையும் அதிபா் பவ்டேல் வலியுறுத்தியதாக அதிபா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

பசுபதிநாத் கோயிலில் ஜெய்சங்கர் வழிபாடு

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காட்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோயிலுக்குச் சென்று வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இரு நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் இந்தியா-நேப்பாளம் சுமூக உறவுக்காகவும் பிரார்த்தனை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
ஒப்பந்தம்