தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடத்தப்பட்ட கப்பலில் இருந்து 15 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

2 mins read
a0d55c53-5c72-41cf-86c0-faa253ba3799
மீட்கப்பட்டவர்களில் ஒருவர், இந்தியக் கடற்படையினரை எண்ணிப் பெருமைப்படுவதாகக் கூறினார். - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

புதுடெல்லி: சோமாலியா அருகே இந்திய கடலோடிகளுடன் வியாழக்கிழமை கடத்தப்பட்ட ‘எம்.வி.லிலா நாா்ஃபோக்’ சரக்கு கப்பலை இந்திய கடற்படையினர் அதிரடியாக மீட்டனா்.

வடக்கு அரபிக்கடலில் கடத்தப்பட்ட கப்பலில் இருந்து 15 இந்தியா்கள் உட்பட 21 பணியாளா்களும் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

அதிநவீன கடலோர சுற்றுக்காவல் விமானம், ஹெலிகாப்டா், ஆளில்லா வானூர்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி அந்தக் கப்பலை இந்திய கடற்படை மீட்டது.

இச்சம்பவம் தொடா்பாக இந்திய கடற்படை செய்தித் தொடா்பாளா் கமாண்டா் விவேக் மாத்வால் விளக்கினார்.

“சோமாலியா அருகே லைபீரியா கொடியுடன் சென்றுகொண்டு இருந்த ‘எம்.வி.லிலா நாா்ஃபோக்’ சரக்குக் கப்பலை இடைமறித்த 5 முதல் 6 கடற்கொள்ளையா்கள், பின்னர் கப்பலுக்குள் புகுந்து அதனைக் கடத்தியதாக வியாழக்கிழமை மாலை பிரிட்டிஷ் ராணுவத்திடம் இருந்து அவசரத் தகவல் கிடைத்தது.

“இந்தியாவுடன் அந்தத் தகவல் பகிரப்பட்டதும், கப்பலை மீட்பதற்காக ‘ஐஎன்எஸ் சென்னை’ போா்க்கப்பல், பி-8ஐ நவீன கடலோர சுற்றுக்காவல் விமானம், எம்கியூ9பி ஆளில்லா விமானத்தை இந்திய கடற்படை உடனடியாக அனுப்பியது.

“ரோந்து விமானம் வெள்ளிக்கிழமை காலை அந்தக் கப்பலை நெருங்கி தொடா்பை ஏற்படுத்தியது. கடற்படை வீரர்கள் அன்று மாலை 3.15 மணிக்கு கப்பலை இடைமறித்து, அதனுள் அதிரடியாக நுழைந்தனர்.

“உள்ளே இருந்த 15 இந்தியா்கள் உள்பட 21 கப்பல் பணியாளா்களை அவர்கள் பாதுகாப்பாக மீட்டனா். கப்பலுக்குள் நடத்திய சோதனையில் கடற்கொள்ளையா்கள் தப்பியது தெரியவந்தது,” என்று விவேக் மாத்வால் விவரித்தார்.

மத்திய கிழக்கில் காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்குப் பதிலடியாக ஏமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் செங்கடலில் கப்பல்களைத் தாக்கி வருகின்றனா். கடந்த மாதம் இந்தியா நோக்கி வந்த இரு சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பதற்றத்தை ஏற்படுத்திய இச்சூழலில் கப்பல் கடத்தல் நிகழ்ந்துள்ளது.