புதுடெல்லி: டெல்லி அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருந்துகள் விநியோகிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, சிபிஐ விசாரணை நடத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தார்.
டெல்லி அரசாங்கத்தின் மொஹல்லா மருந்தகங்கள், மருத்துவமனைகளில் விநியோகிக்கப்பட்ட மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாக சக்சேனா கூறினார்.
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மருந்துப் பொருள்கள் விநியோகிக்கப்படுவதாகவும் சக்சேனா குற்றம்சாட்டியுள்ளார்.
நுரையீரல், சிறுநீர்ப் பாதையைப் பாதிக்கும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளும் தரமற்றவை என்றும் கண்டறியப்பட்டது.
இதனிடையே, டெல்லி அரசு மருத்துவமனைகளுக்கு தரமற்ற மருந்துகளை விநியோகித்தது தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென டெல்லி அரசின் ஊழல் தடுப்புத் துறையும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில், டெல்லி அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருந்துகள் விநியோகிக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.