புது டெல்லி: டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது.
டெல்லியில் குளிர் வாட்டி வதைக்கும் நிலையில் பாலர் பள்ளி முதல் தொடக்கநிலை 5 வரையிலான மாணவர்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு பள்ளிகள் மூடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “குளிர் கடுமையாக இருப்பதன் காரணமாக டெல்லியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் அடுத்த 5 நாட்களுக்கு மூடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் டெல்லியில் குளிர் காரணமாக கடந்த 1ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டு ஜனவரி 8ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருந்தது.
ஆனால் குளிரின் தாக்கம் குறையாததால் இந்த விடுமுறையானது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கவுதம்புத் நகரில் மாவட்ட நிர்வாகம் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜன.14 வரை விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை அன்று டெல்லி அரசு குளிர்கால விடுமுறை முடிந்து பள்ளிகள் 10ஆம் தேதி திறக்கப்படும் என அறிவித்தது. அறிவிப்பு வெளியாகிய சில மணி நேரங்களில் அது திரும்பப் பெறப்பட்டது.
டெல்லியில் வெப்பநிலை இயல்பைவிட குறைந்துள்ள நிலையில் சாலை முழுவதும் பனியால் போர்த்தப்பட்டு காணப்படுகிறது.
“பஞ்சாப், ஹரியானா, டெல்லி, சத்தீஸ்கர், ராஜஸ்தான் பகுதிகளில் நிலவி வரும் குளிரானது கடுமையான குளிராக மாறி அடுத்த 2 நாட்களுக்கு இதே நிலை தொடரும். பின்னர் படிப்படியாக குறையும்” என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தவிக்கும் மக்கள்:
டெல்லியில் அதிகாலை மற்றும் இரவு வேளையில் குளிரின் அளவு அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகிறது. வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் உள்ளதால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் அங்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டது.டெல்லி ரயில் நிலையத்திற்கு செல்லும் ஜம்முதாவி-டெல்லி விரைவு ரயில் உட்பட 22 ரயில்கள் தாமதமாக வந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

