புதுடெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள பாரத் ஜோடோ யாத்திரைக்கான தகவல்களை தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார்.
பின்னர் எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த திரு கார்கே, “அடுத்த 10 முதல் 15 நாட்களில் இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அப்போது இதுகுறித்து முடிவு செய்யப்படும்,” என்றார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக நிதிஷ் குமார் மீண்டும் பொறுப்பேற்றார். இந்நிலையில், பிகார் முதல்வர் நிதிஷ் குமார் இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிரதமர் வேட்பாளர் பொறுப்புக்கு பொருத்தமானவர் என ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் கே.சி.தியாகி கூறியிருந்தார்.
பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கே களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
கார்கே தலித் தலைவராக அறியப்பட்டவர் என்பதும் எந்தவித சர்ச்சையிலும் சிக்காதவர் என்பதும் அவரது பலங்களாகக் கருதப்படுகின்றன.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்குத் தலைமையேற்று அவர் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருவதையும் அவரது ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய ‘இண்டியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பெயரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் முன்மொழிந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
நடப்பு பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து, அவருக்கு நிகரான தலைவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் மட்டுமே இண்டியா கூட்டணிக்கு தேர்தல் களத்தில் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கிறார்கள் அரசியல் கள ஆய்வாளர்கள்.
பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தியைக் களமிறக்க வேண்டும் என்ற கருத்தும் கூட்டணித் தலைவர்கள் மத்தியில் உள்ளது.

