புதுடெல்லி: இந்தியாவில் மருந்துகளைத் தயாரிக்கும் மருந்து நிறுவனங்கள், ஜனவரி 6ஆம் தேதி வெளியிடப்பட்ட புதிய தரநிலைகளைப் பின்பற்ற வேண்டும் என்று இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை காம்பியா, கேமரூன், உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் எடுத்துக்கொண்ட 141 சிறார்கள் உயிரிழந்தனர். அது பெரிய சர்ச்சையாக மாறியது. அதைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்துவருகிறது.
புதிய விதிமுறைகளைப் பின்பற்ற கூடுதல் நேரம் வேண்டும் என்று சிறிய மருந்து நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. கடன் சுமைகள் அதிகம் இருப்பதை காரணமாக கூறுகின்றன சிறு நிறுவனங்கள்.
இந்திய மருந்து வியாபாரம் கிட்டத்தட்ட 67 பில்லியன் வெள்ளி மதிப்புடையது. அதில் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க கவனத்துடன் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.