பில்கிஸ் பானு வழக்கில் பாலியல் குற்றவாளிகள்சிறைக்குத் திரும்புகின்றனர்; குஜராத் அரசு உத்தரவு ரத்து

பில்கிஸ் பானு வழக்கில் பாலியல் குற்றவாளிகள்சிறைக்குத் திரும்புகின்றனர்; குஜராத் அரசு உத்தரவு ரத்து

2 mins read
6930a442-6e0a-440b-979a-030407391230
பில்கிஸ் பானு வழக்கில் விடுவிக்கப்பட்டவர்கள் சிறைக்குத் திரும்புகின்றனர். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: குஜராத் மாநில பில்கிஸ் பானு பாலியல் வழக்கில் விடுவிக்கப்பட்ட 11 குற்றவாளிகளும் மீண்டும் சிறைக்குத் திரும்புகின்றனர். அவர்களை விடுவிக்க குஜராத் அரசு பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து வன்முறை மற்றும் மதக்கலவரம் ஏற்பட்டது.

இந்தக் கலவரத்தில் ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. அவரது குடும்பத்தினர் 14 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தில் பில்கிஸ் பானு, ஒரு ஆண் நபர், ஒரு குழந்தை உட்பட மூவர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

2008ஆம் ஆண்டு மும்பை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி யு.டி.சல்வி, இவ்வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்திருந்தார். 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் 15 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த குற்றவாளிகள் 11 பேரையும் கருணை அடிப்படையில் குஜராத் அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

இதையடுத்து குற்றவாளிகளான ரதீஷம் ஷா, ஜெஷ்வந்த் சதுர்பாய் நய், கேஷ்பாய் வேதன்யா, பகபாய் வேதன்யா, ராஜ்பாய் சோனி, ரமேஷ்பாய் சவுகான், ஷைலேஷ்பாய் பட், பிபின் சந்திர ஜோஷி, கோவிந்தபாய் நய், மிதீஷ் பட், பிரதீப் மோதியா ஆகிய 11 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே குற்றவாளிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பிலும் சில பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டன.

இந்த வழக்கின் விசாரணை கடந்த அக்டோபர் மாதம் நிறைவடைந்தது. ஆனால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (8-1-2024) தீர்ப்பு வழங்கியது. அப்போது பில்கிஸ் பானுவின் மனு விசாரணைக்கு உகந்ததுதான் என்று கூறிய உச்ச நீதிமன்ற அமர்வு, குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்தது.

குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்