மோடி குறித்து சர்ச்சை பேச்சு; மாலத்தீவு தூதருக்கு அழைப்பாணை

2 mins read
0721bd0d-e177-42fb-a5b0-e87a5220c822
லட்சத்தீவு பயணப் பட்டியலில் இடம்பெற வேண்டிய இடம் என்று கூறியுள்ள பிரதமர் மோடி. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பிரதமர் மோடி குறித்து சச்சரவுக்குரிய வகையில் மாலத்தீவு அமைச்சர்கள் பேசியதால் மாலத் தீவு தூதருக்கு இந்தியா அழைப்பாணை அனுப்பியது.

இம்மாதம் 2ஆம் தேதி பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக லட்சத்தீவு சென்றிருந்தார்.

பின்னர் தன்னுடைய பயண அனுபவத்தை எக்ஸ் ஊடகத்தில் திரு மோடி பகிர்ந்து கொண்டார்.

“அமைதியும் அழகும் நிறைந்த லட்சத்தீவு மனதை மயக்குவதாக உள்ளது. நீங்கள் சாகசத்தை விரும்பினால் உங்களின் பயணப் பட்டியலில் லட்சத்தீவு இடம் பெற வேண்டும்,” என்று தமது பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அது மட்டுமல்லாமல் கடற்கரையில் தான் மேற்கொண்ட நடைப் பயிற்சி, கடலுக்கு அடியில் நீந்தியது போன்ற புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார்.

இந்தப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதால் இணையத்தளத் தேடலில் லட்சத்தீவு முன்னிலை பெற்றது.

மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் இந்தியாவின் முயற்சி இது என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரதமர் மோடியை மாலத்தீவு அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

பிரதமர் மோடியை கோமாளி, பொம்மை என்று மாலத்தீவு அமைச்சர் மரியம் விமர்சித்து இருந்தார்.

மேலும் இரண்டு அமைச்சர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து பிரதமர் மோடியை இழிவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள் மால்ஷா ஷெரீப், மரியம் சியுனா, அப்துல்லா மசூம் மஜித் ஆகியோரை அந்நாட்டு அரசு இடைநீக்கம் செய்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்தது தொடர்பாக மாலத்தீவு தூதருக்கு இந்தியா அழைப்பாணை அனுப்பியது.

டெல்லியில் உள்ள மாலத்தீவு தூதரான இப்ராகிம் ஷஹிப்புக்கு அனுப்பிய அழைப்பாணையில் இந்திய வெளியுறவு அமைச்சு விளக்கம் கேட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து பேசிய மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஸமீர், வெளிநாட்டுத் தலைவர்களுக்கு எதிரான இத்தகைய விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிவை அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்டை நாடுகளுடன் மாலத்தீவு தொடர்ந்து ஆக்ககரமான பேச்சு வார்த்தையில் ஈடுபடும் என்றும் அவர் கூறினார்

மாலத்தீவின் முன்னாள் அதிபர் இப்ராஹிம் முஹமட் சோலிக், புதுடெல்லி எப்போதும் எங்களுடைய நட்பு நாடு என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மாலத்தீவுகளுடன் நெருக்கமாகவும் தங்களது அதிகாரத்தை காட்டவும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

மாலத்தீவுகளின் அதிபர் முகம்மது முயிசு, சீனாவின் ஆதரவாளர். இவர் சீனாவுக்கு ஜனவரி 8 முதல் 12ஆம் தேதி வரை ஐந்து நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள வேளையில் இந்த சர்ச்சை வெடித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் அக்‌‌‌ஷே குமார், கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட இந்தியப் பிரபலங்கள் பலர் மாலத்தீவு அதிகாரிகளின் கருத்துகளுக்கு ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.

மேலும் ‌‌‌ஷாருக்கான், சச்சின் உள்ளிட்டவர்கள் உள்ளூர் சுற்றுலாத்தலங்களுக்கு இந்திய மக்கள் செல்ல வேண்டும் என்று பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

சில இந்தியர்கள், மாலத்தீவுகளுக்கு செல்வதைத் தவிர்க்கவிருப்பதாகவும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்