புதுடெல்லி: இந்தியாவிலிருந்து 1.75 லட்சம் பேர் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளவிருக்கின்றனர்.
இந்தியா-சவூதி அரேபியாவுக்கு இடையே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
முன்னதாக இவ்வாண்டுக்கான ஹஜ் யாத்திரை குறித்த அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் 3வது ஹஜ் மற்றும் உம்ரா மாநாடு திங்கட்கிழமை நடந்தது. இதில் இந்தியாவின் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெட்டா விமான நிலையத்திற்கு வந்த அவரை இந்தியத் தூதர் சுகேல் கான் மற்றும் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.
ஸ்மிருதி இரானியுடன் உயர்மட்டக் குழுவினரும் சென்றுள்ளனர்.
இரண்டு நாள் பயணமாக சவூதி சென்றுள்ள இந்தியாவின் ஸ்மிருதி இரானி, சவூதி ஹஜ் மற்றும் உம்ரா நலத்துறை அமைச்சர் தவ்பிக் பின் பஸ்வான் அல் ரபியாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் இவ்வாண்டுக்கான இருதரப்பு ஹஜ் ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
இதன்படி 2024 ஆம் ஆண்டில் 175,025 யாத்ரிகர்கள் ஒதுக்கீட்டு ஒப்பந்தத்தில் இந்தியாவும் சவூதி அரேபியாவும் கையெழுத்திட்டுள்ளன.
அதிகாரபூர்வ அறிக்கையின்படி இந்தியாவுக்கு மொத்தம் 175,025 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே ஹஜ் கமிட்டி மூலம் பயணிக்க 140,020 இடங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 35,005 யாத்ரிகர்கள் தனியார் நடத்துநர்கள் மூலம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.