தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காங்கிரஸ் - ஆம் ஆத்மி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை

1 mins read
63ada681-b034-4683-aad3-582570ea31b3
இண்டியா கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே டெல்லியில் திங்கட்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தேசிய கூட்டணிக் குழுத் தலைவர் முகுல் வாஸ்னிக், அசோக் கெலாட், அர்விந்தர் சிங் லவ்லி, ஆம் ஆத்மி தலைவர்கள் அதிஷி, சவுரப் பரத்வாஜ், சந்தீப் பதக் உள்ளிட்டோர். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: 2024 மக்களவைத் தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக கங்கிரஸ் கட்சி திங்கட்கிழமை அறிவித்தது. இது, தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதன் ஒருங்கிணைப்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் முகுல் வாஸ்னிக் கூறியதாவது:

“மக்களவைத் தேர்தலில் சந்திக்க உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி திறந்த மனதுடன் விவாதம் நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை தொடரும், நாங்கள் மீண்டும் சந்திப்போம். அதன் பிறகு தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி முடிவை அறிவிப்போம். பாஜகவை எதிர்கொள்ள நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். தகுந்த பதிலடி தருவோம்,” என்று முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. சந்தீப் பதக், டெல்லி கேபினட் அமைச்சர்கள் அதிஷி, சவுரப் பரத்வாஜ் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். காங்கிரஸ் தரப்பில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், மோகன் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்