தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோவாவில் 4 வயது மகனைக் கொன்று உடலைப் பைக்குள் திணித்து டாக்சியில் கொண்டு சென்ற தாய்

2 mins read
e3bcb1ef-1d55-48e6-aa56-0a7c1127f5fd
மகனைக் கொலை செய்ததாக நம்பப்படும் பெண் கர்நாடகா காவல்நிலையத்தில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பனஜி: கோவாவில் உள்ள வாடகை வீட்டில் தமது நான்கு வயது மகனைக் கொன்றதாக பெங்களூருவைச் சேர்ந்த 39 வயது தலைமை நிர்வாக அதிகாரி மீது ஜனவரி 8ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டது.

மகனைக் கொலை செய்த பிறகு, அவரது உடலை ஒரு பைக்குள் திணித்து, அந்த வாடகை வீட்டின் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து கொடுத்த டாக்சி மூலம் அந்தப் பெண் கர்நாடகாவுக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

சுசானா சேட் தங்கியிருந்த அந்த வாடகை வீட்டைச் சுத்தம் செய்த ஊழியர், ரத்தக் கறையைப் பார்த்ததை அடுத்து இக்குற்றச் செயல் வெளிச்சத்துக்கு வந்தது.

தகவல் அறிந்து வாடகை வீட்டுக்கு விரைந்த கோவா காவல்துறையினர், வீட்டைச் சோதனை செய்தனர். பிறகு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த பிறகு தமது மகன் இல்லாமல் சுசானா அங்கிருந்து கிளம்பிச் சென்றது தெரியவந்தது.

வாடகை வீட்டின் நிர்வாகத்தினர் டாக்சி ஓட்டுநரின் கைப்பேசி எண்ணை காவல்துறை ஆய்வாளரிடம் கொடுத்தனர்.

டாக்சி ஓட்டுநரிடம் தொடர்புகொண்டு கைப்பேசியை சுசானாவிடம் கொடுக்கும்படி ஆய்வாளர் கூறினார். மகனைப் பற்றி சுசானாவிடம் ஆய்வாளர் கேள்வி எழுப்பியபோது மகனைத் தமது தோழியின் வீட்டில் விட்டுச் சென்றதாக சுசானா கூறினார்.

தோழியின் முகவரியை ஆய்வாளர் அவரிடம் கேட்டபோது போலி முகவரியை சுசானா தந்தார்.

இம்முறை அந்த டாக்சி ஓட்டுநருடன் காவல்துறை ஆய்வாளர் மீண்டும் தொடர்புகொண்டு சுசானாவுக்குத் தெரியாத கொங்கனி மொழியில் பேசி, சுசானாவுக்குச் சந்தேகம் ஏற்படாத வகையில் அருகில் உள்ள காவல்துறை நிலையத்துக்குச் செல்லும்படி கூறினார்.

அப்போது டாக்சி கர்நாடகா மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டத்தில் இருந்தது.

அருகில் இருந்த காவல்நிலையத்துக்கு அந்த ஓட்டுநர் ஓட்டிச் சென்றார்.

அங்குள்ள காவல்துறை அதிகாரி சுசானா வைத்திருந்த பையைச் சோதனையிட்டார்.

அதில் அந்த சிறுவனின் உடல் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

கோவா காவல்துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சித்ரதுர்காவில் உள்ள ஐமங்களா காவல்நிலையத்தில் சுசானா தடுத்து வைக்கப்பட்டார்.

சுசானாவைக் கைது செய்து கோவாவுக்கு அழைத்துச் செல்ல கோவா காவல்துறையினர் கர்நாடகாவுக்கு விரைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கொலைக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்