பெங்களூரு: சிங்கப்பூருக்கு தன்னை அழைத்துச் செல்ல மறுத்த கணவரைக் கத்தியால் குத்தியதற்காக 52 வயது மாது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பெங்களூருவில் ஜனவரி 6ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
இந்தத் தம்பதியர் 2002ஆம் ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்தனர்.
ஆனால் அந்தப் பெண்ணின் 56 வயது கணவர் கடந்த 25 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரிந்தார்.
ஒவ்வோர் ஆண்டும் ஓரிரு முறை மட்டுமே இந்தியாவில் இருக்கும் தமது மனைவியையும் 20 வயது மகனையும் அவர் சென்று பார்த்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் அந்த ஆடவரின் மனைவியும் மகனும் சிங்கப்பூருக்கு வந்து அவருடன் தங்கினர்.
மேற்படிப்பைத் தமது மகன் சிங்கப்பூரில் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இத்தம்பதியருக்கு இருந்தது.
ஜனவரி 5ஆம் தேதியன்று மூவரும் இந்தியா திரும்பினர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், ஜனவரி 19ஆம் தேதியன்று தமது மகனை மட்டும் அழைத்துக்கொண்டு சிங்கப்பூர் செல்ல அந்த ஆடவர் திட்டமிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஜனவரி 6ஆம் தேதி காலை, தமது மனைவியிடம் அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பிறகு அதே நாள் பிற்பகல் நேரத்தில், அந்த ஆடவர் தமது படுக்கையறையில் தூங்கிக்கொண்டிருந்தபோது அந்த மாது அவரைக் கத்தியால் குத்தினார்.
தமது மனைவி கத்தியைப் பயன்படுத்தி தமது தலையிலும் கையிலும் காயங்களை ஏற்படுத்தியதாகவும் தமது முதுகில் கத்தியால் குத்தியதாகவும் அந்த ஆடவர் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
கத்தியால் குத்தியது மட்டுமல்லாது, மிளகாய்த்தூள் கலந்த நீரைக் கணவரின் முகத்தில் அந்த மாது தெளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஆடவருக்கு 14 தையல்கள் போடப்பட்டன.

