அமலாக்கத்துறை அழைப்பாணைகளைப் புறக்கணித்த முதல்வர்: எந்நேரத்திலும் கைதாக வாய்ப்பு

2 mins read
579ed8d8-cd66-48e2-b160-aef3033e86c3
ஹேமந்த் சோரன். - படம்: ஊடகம்

ராஞ்சி: சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணைக்கு நேரில் முன்னிலையாகுமாறு அனுப்பப்பட்ட ஏழு அழைப்பாணைகளை ஏற்காததை அடுத்து, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இத்தகைய பரபரப்பான சூழலில், அமலாக்கத்துறைக்கு எந்த வகையிலும் ஒத்துழைக்க வேண்டாம் என அம்மாநில அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளதாகவும் என்டிடிவி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

மத்திய அரசின் கீழ் உள்ள எந்தவொரு விசாரணை முகமைக்கும் அரசு கோப்புகளை நேரடியாக அளிக்க வேண்டாம் என்றும் அம்முகமைகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும் மாநில அரசுத் துறைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய விசாரணை முகமைகள் எப்படி அணுகினாலும், அது குறித்து அமைச்சரவை செயலகம் அல்லது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

“அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை என விசாரணை முகமைகளுக்கு ஜார்க்கண்ட் அரசும் முதல்வர் ஹேமந்த் சோரனும் உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது.

ஆனால், மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஜார்க்கண்ட் அரசு அதிகாரிகளுக்கு அழைப்பாணைகளை அனுப்பி விசாரணை நடத்தப்பட உள்ளதாக மாநில அரசும் கூறுகிறது.

ஹேமந்த் சோரன் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சுரங்க ஒதுக்கீடு மூலம் பண ஆதாயம் அடைந்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியதும் ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.

எனினும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, தனக்குள்ள பெரும்பான்மையை நிரூபித்தார் சோரன்.

இதையடுத்து, அவருக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் உட்பட 14 பேரை கைது செய்துள்ளது அமலாக்கத்துறை.

இந்நிலையில், விசாரணைக்கு முன்னிலையாகாததால் அவர் எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்