புதுடெல்லி: தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களைக் கண்டறிந்து கௌரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், ஸ்வஸ் சர்வேக்ஷான் என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை 2016ல் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை ஒவ்வோர் ஆண்டும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்டது.
இந்தப் பட்டியலில் இந்தூர் மற்றும் சூரத் ஆகிய இரு நகரங்கள் முதல் இடத்தைப் பிடித்துள்ளன. இந்தூர் தொடர்ந்து 7வது முறையாக முதல் இடத்தைத் தக்கவைத்துள்ளது. நவி மும்பை மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
ஒட்டுமொத்தமாக ‘ஸ்வஸ் சர்வேக்ஷான்’ திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பட்டியலில் மகராஷ்டிரா முதல் இடத்தையும், மத்தியப் பிரதேசம் 2வது இடத்தையும், சத்தீஸ்கர் 3வது இடத்தையும் பிடித்துள்ளன.
முதல் இடம் பிடித்துள்ள நகரங்களுக்கு வெற்றிக்கான விருதை இந்திய அதிபர் திரவுபதி முர்மு, அம்மாநிலங்களை சேர்ந்த அரசு அதிகாரிகளிடம் வழங்கினார்.