அகமதாபாத்: அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு வியாழக்கிழமையன்று (ஜனவரி 11) இண்டிகோவின் முதல் விமானம் கிளம்பியது. இதில், பிரயாணம் செய்த சில பயணிகள் ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் உள்ளிட்ட வேடங்களுடன் காட்சியளித்தனர். இதர பயணிகள் இவர்களைக் கண்டு ரசித்தனர்.
விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் விமான நிலைய ஊழியர்களுடன் இணைந்து அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு இண்டிகோவின் முதல் விமானம் கிளம்ப இருப்பதை அடுத்து கேக் வெட்டிக் கொண்டாடினர்.
இதுகுறித்த காணொளி, புகைப்படங்கள் இணையத் தளங்களில் பரவி வருகின்றன.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்ட அயோத்தி கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் குடமுழுக்கு விழா வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது.
கோயிலைச் சிறப்பிக்கும் வகையிலும் அயோத்திக்குச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கத்திலும் அயோத்தியில் அண்மையில் புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.