தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

85 வயது மூதாட்டியின் 30 ஆண்டு மௌன விரதம் முடிவுக்கு வரவுள்ளது

3 mins read
a6fe9e3f-3720-4409-a50c-2bb53b001715
85 வயது மூதாட்டி சரஸ்வதி தேவி. - படம்: ஊடகம்

தன்பாத்: இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் பகுதியைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி சரஸ்வதி தேவி, “ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் வரை வாய் திறந்து பேசமாட்டேன்,” என கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் சபதம் போட்டு, இதுவரை மௌன விரதம் இருந்து வந்தார்.

இப்போது, இம்மாதம் 22ஆம் தேதி ராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில் தன் விரதத்தை நிறைவு செய்ய முடிவு செய்துள்ளார்.

மூதாட்டி சரஸ்வதிக்கு நான்கு மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் அகர்வால் 1986ல் இறந்துவிட்டார்.

அதன்பின், ஆன்மிகத்தில் ஆர்வம் ஏற்பட்டு, பெரும்பாலான நேரத்தைக் கடவுள் ராமரை வழிபடுவதையும் அவர் புகழ் பாடுவதையும் லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

கடந்த 1992ல் ராமஜென்ம பூமியில் இருந்த மசூதி அகற்றப்பட்ட பின் சரஸ்வதி தேவி ஒரு சபதம் எடுத்தார்.

“ராமஜென்ம பூமியில், ராமருக்கு கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடக்கும்வரை வாய் திறந்து பேச மாட்டேன். மௌன விரதம் இருப்பேன்,” என அறிவித்து, அதன்படி பின்பற்றத் துவங்கினார்.

தனக்கு வேண்டியவற்றை சைகை வாயிலாகவே பிறருக்குத் தெரிவித்து வந்தவர், சைகையால் விளக்க முடியாத விஷயங்களை எழுதிக் காட்டி விளக்குவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

கோவில்களுக்குச் சென்று ராமர் பற்றிய பாடல்களை முணுமுணுப்பது, ஹனுமன் சாலிசா பாடுவது என தன் அன்றாட வாழ்வை நகர்த்தி வந்தார்.

இந்நிலையில்தான், 2020ல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதைக் கேள்விப்பட்டதும், குடமுழுக்கு நாளன்று வாய் திறந்து பேசுவேன் என அறிவித்தார்.

ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்கும்படி சரஸ்வதி தேவிக்கு ஆன்மிக அமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதை ஏற்று, தன்பாத்தில் இருந்து அயோத்திக்கு கங்கா சட்லெஜ் ரயிலில் புறப்பட்டுச் சென்றார்.

இது குறித்து சரஸ்வதி தேவியின் மகன் ஹரே ராம் அகர்வால் கூறுகையில், “கடவுள் ராமருக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் என் அம்மா.

“பிடிவாதக் குணமுடைய அவர், 1992ல் இருந்து மௌன விரதம் இருந்து வருகிறார்.

“ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டதும் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

“ராமர் கோவில் குடமுழுக்கு நாள் என் தாய்க்கு மறக்க முடியாத, மகிழ்ச்சியான ஒரு நாளாக அமையும்,” என்று கூறினார்.

சீதை பிறந்த ஊரிலிருந்து வந்த சீதனம்

ராமாயணத்தில் சீதா தேவி பிறந்த ஊராகக் கூறப்படுவது சாணக்யாபுரி.

நேப்பாள நாட்டில் தற்போதுள்ள ஜனக்பூர் என்ற இடம்தான், சாணக்யாபுரி என பக்தர்களால் நம்பப்படுகிறது. இங்குள்ள ராம் ஜானகி கோவில் மிகவும் பிரபலமானது.

ராமர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, இந்தக் கோவிலில் இருந்து 12க்கும் மேற்பட்ட வாகனங்களில் 3,000க்கும் அதிகமான பரிசுக் கூடைகள் அண்மையில் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த பரிசுப் பொருள்களை ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகத்திடம் ராம் ஜானகி கோவில் நிர்வாகி ராம் ரோஷன் தாஸ் ஒப்படைத்தார்.

வைர நெக்லஸ், தங்கக் காலணிகள், சுவைமிகுந்த இனிப்புப் பொருள்கள், ராமர், சீதா தேவி சிலைகள் ஆகியவை இந்த பரிசுக் கூடைகளில் இடம்பெற்றுள்ளன.

நேப்பாளத்திலிருந்து எடுத்து வரப்பட்ட இனிப்புகளை ராமர் கோவில் குடமுழுக்கு விழாவின் போது பக்தர்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்