அகமதாபாத்: ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு பயணக் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்தது.
அதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 விழுக்காடு கட்டணச் சலுகையும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 விழுக்காடு கட்டணச் சலுகையும் வழங்கப்பட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு, கொரோனா தொற்று காலத்தில் இந்தச் சலுகை திரும்பப் பெறப்பட்டது. அதன்பின்னர் இந்தச் சலுகை இன்னும் தொடரப்படவில்லை.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் புல்லட் ரயில் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய அஸ்வினி வைஷ்ணவ் அகமதாபாத் சென்றார். அப்போது அவரிடம் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகை குறித்து கேள்வி எழுப்பபட்டது.
அதற்கு பதிலளித்த அஸ்வினி வைஷ்ணவ், “இந்திய ரயில்வே ஏற்கெனவே ஒவ்வொரு ரயில் பயணிக்கும் ரயில் கட்டணத்தில் 55 விழுக்காடு சலுகையை வழங்குகிறது. ஓர் இடத்திற்குச் செல்ல ரயில் டிக்கெட்டுக்கு 100 ரூபாய் என்றால், ரயில்வே கட்டணம் 45 ரூபாய் மட்டுமே. அது 55 ரூபாய் சலுகை அளிக்கிறது,”என்றார்.

