ஹைதராபாத்: பேருந்தில் விட்டுச் செல்லப்பட்ட சண்டை சேவல் குறித்து விளம்பரம் கொடுத்தும் அதனை மீட்டுச் செல்ல உரிமையாளர்கள் யாரும் வராததால், வெள்ளிக்கிழமை அதனை ஏலத்தில் விடப் போவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
தெலுங்கானாவில் பந்தயச் சேவலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு உள்ளதால் ஏராளமானோர் கலந்து கொண்டு சண்டை சேவலை ஏலம் எடுப்பார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, கரீம் நகர் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் இருந்து வெமுலவாடா பேருந்து நிலையத்திற்கு அரசுப் பேருந்து வந்தது.
அதில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்றவுடன், ஓட்டுநரும் நடத்துநரும் உணவு சாப்பிடுவதற்காகச் சென்றபோது, பேருந்தில் இருந்து சேவல் கூவும் சத்தம் கேட்டது.
ஓட்டுநரும் நடத்துநரும் அதில் ஏறிப் பார்த்தபோது, பயணிகளின் சீட்டுக்கு அடியில் இருந்த ஒரு பையில் சண்டை சேவல் ஒன்று விழித்துப் பார்த்துக்கொண்டிருந்தது.
அதன்பின்னர், சண்டை சேவலை கரீம் நகர் பணிமனைக்குக் கொண்டு சென்று, இரும்புக் கூண்டில் அடைத்து வைத்து உணவு வழங்கினர்.
சண்டை சேவலை விட்டுச் சென்றவர் அதனை வந்து மீட்டுச் செல்லலாம் என விளம்பரம் செய்து மூன்று நாட்களாகியும் யாரும் தங்களுடைய சேவல் என சொந்தம் கொண்டாடி வராததால், அதனை நேற்று ஏலம் விட அதிகாரிகள் முடிவு செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆந்திராவில் சேவல் சண்டை போட்டிகளின்போது பல கோடி ரூபாய்க்கு பந்தயம் நடக்கும். மேலும் தற்போது பொங்கல் விழாக் காலமாக இருப்பதால் இந்த சண்டை சேவலும் அதிக ஏலத் தொகையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

