கெஜ்ரிவாலுக்கு 4வது முறையாக அமலாக்கத்துறை அழைப்பாணை

1 mins read
1826f476-1423-4f0f-881e-63cabce43268
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். - படம்: ஊடகம்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஏற்கெனவே மூன்று முறை அழைப்பாணை அனுப்பியிருந்த நிலையில் இப்போது நான்காவது முறையாக அழைப்பாணை அனுப்பியுள்ளது.

அதில், வரும் 18ஆம் தேதி விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

டெல்லி அரசின் மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இவ்விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதனிடையே, டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குத் தொடர்பில், ஏற்கெனவே டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, இவ்வழக்கு குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடமும் விசாரணை நடத்துவதற்காக கடந்த நவம்பர் 2, டிசம்பர் 21, ஜனவரி 3 ஆகிய தேதிகளில் முன்னிலையாகுமாறு அமலாக்கத்துறை அவருக்கு அழைப்பாணை அனுப்பி இருந்தது.

ஆனால், அவர் முன்னிலையாகாததால், 4வது முறையாக இப்போது அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

முன்னதாக, மாநிலங்களவைத் தேர்தல், குடியரசு தின விழா ஏற்பாடுகள் உள்ளிட்ட காரணங்களைக் கூறி முன்னிலையாகாத கெஜ்ரிவால், இம்முறையாவது விசாரணைக்கு முன்னிலையாவாரா என்ற எதிர்பார்ப்பு டெல்லி அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது. 

குறிப்புச் சொற்கள்