அதிநவீன ஆளில்லா வானூர்தியைத் தயாரிக்கும் திட்டத்தை இந்தியா கைவிட்டது

1 mins read
8a9a6234-dbed-44f6-be7d-8166b7593dd0
அதிநவீன ஆளில்லா வானூர்தி இரண்டு முறை விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: அதிநவீன ஆளில்லா வானூர்தியைத் தயாரிக்க மிகப் பெரிய திட்டம் ஒன்றை இந்தியா அறிவித்திருந்தது.

ஆனால் வான்வழி வாகனம் தயாரிக்கும் திட்டம் ராணுவ இயக்குமுறைக்குத் தேவையான தகுதிநிலையை எட்டாததால் கைவிடப்பட்டுள்ளதாக இந்திய அரசு வட்டாரங்கள் ஞாயிறன்று கூறின.

இதனால் தற்காப்புக்குத் தேவையானவற்றைத் தயாரிப்பதில் தற்சார்பு நிலையை எட்ட இந்தியா கொண்டுள்ள இலக்கிற்கு இது மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

உளவு மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்கான அதிநீவன ஆளில்லா வானூர்தியை இந்தியா சுயமாகத் தயாரிக்கும் என்று 2011ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்காக ரூ.1,650 கோடி ஒதுக்கப்பட்டது.

அந்த வானூர்தி 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் தயாராகிவிட வேண்டும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தயாரிப்புப் பணிகளின்போது பல சிக்கல்கள் ஏற்பட்டன.

இதற்கிடையே, அதைத் தயாரிப்பதற்கான செலவினமும் ரூ. 1,786 கோடியாக அதிகரித்தது.

புதிய ஆளில்லா வானூர்தி கிட்டத்தட்ட 200 முறை பறக்கவிடப்பட்டதாகவும் அது இரண்டு முறை விழுந்து நொறுங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்