பனிமூட்டத்தில் மூழ்கிய டெல்லி; 100 விமானங்கள் தாமதம்

பனிமூட்டத்தில் மூழ்கிய டெல்லி; 100 விமானங்கள் தாமதம்

2 mins read
8c7369ef-69aa-4f40-b574-3e5448ad702b
ஓடுதளம் காண முடியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்திருந்தது. - படம்: ஏஎன்ஐ

புதுடெல்லி: டெல்லியில் கடும் பனிப்பொழிவு காரணமாக திங்கட்கிழமை அன்று நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன.

ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி உட்பட வட இந்திய மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது.

இந்த நிலையில் டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் ஓடுதளத்தை மறைக்கும் அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. முற்றிலும் பார்க்க முடியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுகிறது.

இதனால் விமானங்கள் இறங்க முடியாமலும் புறப்பட முடியாமலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஏறக்குறைய நூறு விமானங்களுக்கு தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் அதிகம் பனிமூட்டம் இருந்தது. ஆனால் 5.30 மணியளவில் சற்றுக் குறையத் தொடங்கியது.

டெல்லியில் இப்பருவத்தில் இல்லாத அளவுக்கு குளிர் அதிகரித்துள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலை 3.3 டிகிரி செல்சியசுக்குக் குறைந்தது என்று சஃப்தர்ஜங் கண்காணிப்பகம் தெரிவித்தது.

இந்த நிலையில் மோசமான பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையம், பயணிகளுக்கு ஆலோசனைக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

விமான நிறுவனத்துடன் தொடர்புகொண்ட பிறகு பயணத்தைத் தொடங்குமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

“அசௌகரியத்துக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றும் அது மேலும் கூறியது.

ஞாயிற்றுக் கிழமை 10 விமானங்கள் திருப்பி விடப்பட்டன, ஏறக்குறைய 100 விமானங்கள் தாமதமடைந்தன. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன,

இதற்கிடையே நாட்டின் பல்வேறு பகுதிகளை புதுடெல்லியுடன் இணைக்கும் 18 ரயில் சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டன.

சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா எம் சிந்தியா, அடர்ந்த பனிமூட்டம் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அல்லது தாமதமாகி வருவதால், டெல்லி விமான நிலையத்தில் பயணிகளின் சிரமத்தைக் குறைக்க 24 மணி நேரமும் சம்பந்தப்பட்டவர்கள் உழைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 3-7 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியுள்ளது. அடர்ந்த மூடுபனி மற்றும் குளிரில் வட இந்திய மாநிலங்கள் நடுக்கத்தில் உள்ளன.

பஞ்சாப்பில் 16 மாவட்டங்களுக்கும் ஹரியானாவில் எட்டு மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்