தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயணம் தாமதம்: கோபத்தில் விமானியை சரமாரியாகத் தாக்கிய பயணி

2 mins read
f425b740-a962-4c0b-85e9-d216b855586d
விமானம் தாமதமாக செல்வதற்கான காரணத்தை விளக்கிக் கூறிய இண்டிகோ விமானி, பயணி ஒருவரால் தாக்கப்பட்டார். - காணொளிப்படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பனிமூட்டம் காரணமாக விமானம் தாமதமாகப் புறப்படும் என அறிவித்துக் கொண்டிருந்த விமானியைப் பயணி ஒருவர் தாக்கிய சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

தலைநகர் டெல்லி உட்பட வட இந்திய மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவும் சூழலில், ஒரு சில மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் சில மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுத்திருந்தது இந்திய வானிலை மையம்.

இந்நிலையில், டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்பட்டுச் செல்வதிலும் தரையிறங்குவதிலும் தாமதம் தொடர்ந்து வருகிறது.

டெல்லியில் இருந்து கோவாவுக்குப் புறப்பட்டுச் செல்ல இருந்த இண்டிகோ விமானம் பனிமூட்டம் காரணமாக தாமதமானது. பல மணி நேரம் தாமதமானதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனிடையே, விமானம் தாமதமானதற்கான விளக்கத்தை விமானி அறிவித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது விமானத்தின் கடைசி இருக்கையில் இருந்த பயணி ஒருவர் வேகமாக ஓடி வந்து அறிவிப்பை வெளியிட்டுக்கொண்டிருந்த விமானியை சரமாரியாகத் தாக்கினார். இதைப்பார்த்து இதர பயணிகளும் விமானப் பணியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, விமானியைத் தாக்கிய பயணி உடனடியாக விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டார்.

விமானி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து இண்டிகோ விமான நிறுவனம் காவல்துறையில் புகாரளித்துள்ளது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

விமானியை பயணி தாக்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பயணி மீது சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இனிமேல் விமானங்களில் பயணம் செய்ய முடியாதபடி விமானத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் அவரை சேர்க்கவேண்டும் என்றும் வலைத்தளவாசிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்