காதலிபோல் வேடமிட்டுத் தேர்வு எழுதி மாட்டிக்கொண்ட காதலன்

2 mins read
3c7357ac-f58a-4cf1-b387-1dc6241c1d07
25 வயது அங்கிரேஸ் சிங்கிடம் பஞ்சாப் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. - படம்: இந்திய ஊடகம்

சண்டிகர்: காதலியின் சார்பாக ஆட்சேர்ப்புத் தேர்வு எழுத, யாரும் நினைத்துப் பார்க்காத ஒன்றை 25 வயது அங்கிரேஸ் சிங் செய்தார்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாபா ஃபரீத் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைக்கு ஆள் சேர்க்க தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வில் எழுதி தேர்ச்சிபெற்று காதலியான பரம்ஜீத் கோருக்கு வேலை கிடைக்க உதவும் நோக்கில், சிங் தமது காதலியைப் போல வேடமிட்டுத் தேர்வு எழுதச் சென்றார்.

யாருக்கும் சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக பஞ்சாபி ஆடையை அணிந்துகொண்டதுடன் கைகளில் வளையல்கள், நெற்றியில் பொட்டு, உதட்டுச் சாயம் ஆகியவற்றால் சிங் தம்மை அழகுபடுத்திக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாது, போலி அடையாள ஆவணங்களையும் வாக்காளர் அட்டையையும் அவர் பயன்படுத்தினார்.

தேர்வு அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி அவர் தேர்வு நடைபெற்ற இடத்துக்குச் சென்று தேர்வை எழுதத் தொடங்கினார்.

முதல் ஒரு மணிநேரம், சிங்கிற்குச் சாதகமாக அமைந்ததாக வியோன் செய்தி நிறுவனம் தெரிவித்தது. யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிங் மிக மும்முரமாகப் பதில்களை எழுதிக்கொண்டிருந்தார்.

ஆனால், நேரம் செல்லச் செல்ல தேர்வு அதிகாரிகளுக்கு அவர் விநோதமாக உடையணிந்திருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சோதனை நடத்திய அதிகாரிகள் உண்மையைக் கண்டுபிடித்தனர்.

தமது காதலியைப் போல வேடமிட்டு தேர்வு எழுதிக்கொண்டிருந்த சிங்கின் விரல்ரேகை சோதிக்கப்பட்டது. பதிவேட்டில் இருந்த பரம்ஜீத் கோரின் விரல்ரேகையுடன் அதிகாரிகள் அதை ஒப்பிட்டுப் பார்த்தபோது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

உடனடியாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து, சிங் கைது செய்யப்பட்டார்.

தேர்வு எழுத பரம்ஜீத் கோருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 7ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து திங்கட்கிழமை (ஜனவரி 15) ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த விநோதமான சம்பவம் குறித்து பஞ்சாப் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

போலி ஆவணங்கள் பயன்படுத்தும் சட்டவிரோத கும்பல்களுடன் சிங்கிற்குத் தொடர்பு உள்ளதா என்பதை கண்டுபிடிக்க காவல்துறை அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்