மும்பை: விளையாட்டுச் செயலியை தான் விளம்பரப்படுத்துவதுபோல வெளியான காணொளி பொய்யானது என்று முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
“பணம் சம்பாதிப்பது இவ்வளவு எளிது என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டது. எனது மகளே இந்தச் செயலியை பயன்படுத்தி வருகிறார்,” என்று அந்த போலி விளம்பரத்தில் செயலிக்கு ஆதரவாக சச்சின் டெண்டுல்கர் பேசுவது போல சித்திரிக்கப்பட்டுள்ளது.
அந்தக் காணொளியை எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள சச்சின் டெண்டுல்கர் அது போலியானது என்று கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவது குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.
“இந்தக் காணொளிகள் போலியானவை. தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது கவலையாக உள்ளது. இது போன்ற போலியான காணொளிகள் மற்றும் விளம்பரங்கள் குறித்து புகாரளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
“தவறான தகவல் மற்றும் போலி காணொளிகள் பரவுவதைத் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுப்பது அவசியம்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.