மும்பை: மிலிந்த் தியோரோ விலகியதால் பாதிப்பு இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பருமான மிலிந்த் தியோரா, அக்கட்சியில் இருந்து விலகுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவில் அவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்தின் மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்தீப் திக்ஷித், “தியோராவைப் போன்ற ஒருவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவின் கூட்டணிக் கட்சியில் இணையப்போவது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. மனிதனுக்கு இரண்டு பெரிய பலவீனங்கள் இருக்கின்றன. பயமும் பேராசையுமே அவை.” என்றார்.
இதற்கிடையே மிலிந்த் தியோரா வெளியேறியதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று அக்கட்சியின் தகவல் தொடர்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
“ஒரு மிலிந்த் தியோரா வெளியேறுவார். ஆனால் லட்சக்கணக்கான மலிந்த் தியோராக்கள் எங்களுடன் வந்து சேருவார்கள். காங்கிரசை இது எந்த வகையிலும் பாதிக்காது. இந்த முடிவு பிரதமர் மோடியால் எடுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

