தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

2 mins read
8a32f46e-b372-40c3-a679-89d986b7b1b4
டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, ‘இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்’ என தமிழில் வாழ்த்துகளைத் தெரிவித்தார். விழாவில் நடிகை மீனாவும் கலந்துகொண்டார். - படம்: எக்ஸ் சமூக ஊடகம்

புதுடெல்லி: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை திங்கட்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இத்திருநாளை ஒட்டி, “பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்,” எனப் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில், “அறுவடையைக் கொண்டாடும் இந்தப் பண்டிகை புதிய நம்பிக்கைகளையும் புதிய தொடக்கங்களையும் கொண்டு வரட்டும். இது புதிய விருப்பங்களை ஒளிரச் செய்து மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினார்.

புது மண்பானையில் அமைச்சர் எல்.முருகன், அவரது மனைவி ஆகியோர் பொங்கல் வைத்தனர். பிரதமர் மோடி பச்சரிசியை பானையில் போட்டு, பால் ஊற்றினார். பொங்கல் பொங்கியதும் ‘பொங்கலோ பொங்கல்’ என உற்சாகமாக அனைவரும் குரல் எழுப்பினர்.

அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டுக்குப் பிரதமர் மோடி மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்.

அதைத் தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்டவற்றை மோடி மிகுந்த ஆர்வதோடு கண்டு ரசித்தார்.

விழாவில் ‘இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்’ என தமிழில் வாழ்த்து கூறி பேசிய பிரதமர் மோடி, ‘‘பொங்கல் விழாவில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன். நமது ஒவ்வொரு விழாவும் விவசாயிகளுடன் தொடர்புடையது.

“சிறு தானியங்களின் முக்கியத்துவம் குறித்து தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. தமிழ் பெண்கள் வீடுகளில் போடும் வண்ணக் கோலங்களில் பெரிய மகத்துவம் உள்ளது. பல புள்ளிகள் இணைந்து கோலமாவது போல் பல தரப்பினர் இணைந்தால் நாடு அழகாகிறது.

“பொங்கல் பண்டிகையானது ‘ஒரே பாரதம் சிறந்த பாரதம்’ என்கிற உணர்வைத் தருகிறது.’’ என்றார்.

குறிப்புச் சொற்கள்