தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அடல் சேது பாலம் கேளிக்கை இடம் அல்ல: பொதுமக்களுக்கு மும்பை காவல்துறை எச்சரிக்கை

1 mins read
131e2aa7-48b8-453a-b22b-1a21a04b75d8
பாலத்தில் செல்லும் மக்கள், வாகனங்களை நிறுத்தி புகைப்படம், வீடியோ மற்றும் செல்ஃபி எடுத்தவண்ணம் உள்ளனர். - படங்கள்: இந்திய ஊடகம்

மும்பை: மும்பை-நவி மும்பை இடையே அமைக்கப்பட்டுள்ள அடல் சேது பாலம் அண்மையில் திறக்கப்பட்டது. இந்தப் பாலத்தின் மொத்த நீளம் 21.8 கிலோ மீட்டர். இதில் சுமார் 16.5 கிலோ மீட்டர் தூரம் கடலில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் மிக நீண்ட பாலம் மற்றும் மிக நீண்ட கடல் பாலம் என்ற பெருமைகளை அது பெற்றுள்ளது.

இந்தப் பாலத்தின் மூலம் மும்பையிலிருந்து நவி மும்பைக்கு செல்லும் நேரம் ஒன்றரை மணி நேரத்திலிருந்து வெறும் 20 நிமிடங்களாகக் குறைகிறது. இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் மெதுவாக செல்லும் வாகனங்களுக்கு பாலத்தில் செல்ல அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் இந்தப் பாலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்தப் பாலத்தில் செல்லும் மக்கள், வாகனங்களை நிறுத்தி புகைப்படம், வீடியோ மற்றும் செல்ஃபி எடுத்தவண்ணம் உள்ளனர்.

இந்தப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. பொதுமக்களின் கேளிக்கை இடமாக மாறத் தொடங்கியதால் பாலத்தில் போக்குவரத்து நிலைக்குத்திபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

“அடல் சேது பாலம் நிச்சயமாக பார்த்து ரசிக்கும் அளவிற்கு மதிப்புமிக்கது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் வாகனங்களைப் பாலத்தில் நிறுத்துவதும், புகைப்படங்கள் எடுப்பதும் சட்டவிரோதமானது. பாலத்தில் வாகனங்களை நிறுத்தினால், வழக்கு பதிவு செய்யப்படும்,” என போக்குவரத்து காவல்துறை தனது எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்