தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மும்பைக்கு திருப்பி விடப்பட்ட இண்டிகோ விமானம்: ஓடுதளத்துக்கு அருகிலேயே அமர்ந்த பயணிகள்

2 mins read
e9f15d1a-155f-420a-ab70-8ef319bcdfd3
படம்: - இந்திய ஊடகம்

மும்பை: மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ 6E 2195 விமானத்தில் இருந்த பயணிகள் விரைந்து அதிலிருந்து வெளியேறினர்.

தரையிறங்கிய வேகத்தில் ஓடுதளத்துக்கு அருகில் உள்ள டார்மாக் (விமானங்கள் நிறுத்தும் இடம்) பகுதியில் அமர்ந்தபடி உணவும் உண்டனர். இந்தக் காட்சி இணையத்தில் காணொளியாக வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டது.

இந்தச் சூழலில் இது குறித்து மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையம் மற்றும் இண்டிகோ விமான நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.

கோவாவில் இருந்து டெல்லி சென்ற இந்த விமானம் அடர்ந்த மூடுபனி காரணமாக மும்பையில் தரையிறக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. அன்றைய தினம் டெல்லியில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் திருப்பி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோவாவில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய அந்த விமானம் குறித்த நேரத்தில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நிலவிய மூடுபனி காரணமாக மும்பைக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. மும்பையில் விமானத்துடன் படிகள் இணைக்கப்பட்ட நிலையில் பயணிகள் அதில் இருந்து வெளியேறிய நிலையில் ஓடுதளத்துக்கு அருகில் விமானம் நிறுத்தப்படும் டார்மாக் பகுதியில் அமர்ந்துள்ளனர்.

அந்த இடத்துக்கு விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற முயன்றனர். ஆனால், அதில் தோல்வியைத் தழுவினர் என விமான நிலைய செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

மோசமான வானிலை காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டது. இதற்கு தங்கள் பயணிகளிடம் இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. இது மாதிரியான சம்பவங்கள் வரும் நாள்களில் நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும், இது குறித்து விசாரித்து வருவதாகவும் இண்டிகோ தெரிவித்துள்ளது. இந்த விமானம் சுமார் 12 மணி நேரம் தாமதம் ஆனதாக தகவல்.

குறிப்புச் சொற்கள்