அமராவதி: ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டியை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.
அதில், ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டியை மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளார் என்றும் இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆந்திரப் பிரதேச முதல்வராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி இருந்து வரும் நிலையில், அவரது சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி அவருக்குப் போட்டியாக காங்கிரஸ் தலைவராக களமிறக்கப்பட்டு இருப்பது ஆந்திர அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
விரைவில் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலுடன் மக்களவைத் தேர்தலும் வர உள்ள சூழலில், அண்ணன் ஜெகன் மோகனுக்கும் தங்கை ஷர்மிளாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிர் கொடுக்க, ஷர்மிளாவை ஆந்திர மாநிலத்தின் தலைவராக காங்கிரஸ் கட்சி மேலிடம் நியமித்துள்ளது.