மோரே: மணிப்பூர் மாநிலம், மோரே நகரில் புதன்கிழமை குகி இனத்தவருக்கும் பாதுகாப்புப் படை யினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் கமாண்டோ படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
ஊடகத் தகவல்களின்படி, மோரே அருகே உள்ள பாதுகாப்புப் படையினரின் சாவடி மீது குகி பயங்கர வாதிகள் வெடிகுண்டுகளை வீசி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும்விதமாக பாதுகாப்புப் படையினரும் எதிர்த் தாக்குதல் நடத்தினர்.
மோதலில் காயம் அடைந்த கமாண்டோ வீரர் சோமோர்ஜித் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு கமாண்டோ வீரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கலவரக்காரர்கள் வார்டு 7 அருகே நடத்திய துப்பாக்கிச்சூடு ஒரு மணிநேரம் நீடித்தது.
மோரேயில் காவல் அதிகாரி ஒருவரைக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இம்மோதல் சம்பவம் நடந்துள்ளது.
இதனிடையே மனித உயிர்கள், உடைமைகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக அங்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, இம்பாலின் மேற்கு மாவட்டத்தின் குட்ரூக் கிராமத்தில் ஊர்க் காவலர்களுக்கும் குகி கலவரக்காரர்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மத்திய படையினரின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது.
மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஏற்பட்ட மோதலில் இதுவரை 200க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

