குற்றவியல் தொடர்பான மூன்று புதிய சட்டங்களின் பல கூறுகள் பற்றி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஆசிரியர் சாந்த்வானா பட்டாச்சார்யா, எக்ஸ்பிரஸ் குழும செய்தியாளர் ராஜேஷ் குமார் தாக்குர் ஆகியோருக்கு அளித்த பேட்டியில், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல கேள்விகளுக்கும் விரிவான பதிலளித்துள்ளார்.
1860ஆம் ஆண்டின் இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் (ஐபிசி), 1882இல் உருவாக்கப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1872இல் இந்திய சாட்சியச் சட்டம் போன்ற பிரிட்டிஷ் காலனித்துவ கால குற்றவியல் சட்டங்கள் தற்போது மறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உலகில் அதி நவீன நீதி அமைப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்துரைத்துள்ளார்.
தற்போதைய நீதித் துறை அமைப்பின் மிக முக்கிய பாதக அம்சமாக, ஆக அதிகமான காலதாமதம் விளங்குகிறது என்று கூறிய அவர், இந்த காலதாமதமே பல சந்தர்ப்பங்களில் தண்டனையாக மாறிவிடுகிறது என்று கூறினார்.
ஆனால் இனி, மக்கள் நீதியைப் பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை வராது. புதிய சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று ஆண்டுகளில் நீதி கிடைத்துவிடும். நினைத்த மாத்திரத்தில் வாய்தா பெறும் காலம் மலை ஏறிவிடும் என்று அமித் ஷா கூறுகிறார்.
நீதிமன்ற விசாரணையில் ஒத்திவைப்பு கலாசாரம் பற்றி பாலிவுட் திரைப்பட வசனம் ஒன்றை அவர் மேற்கோள் காட்டினார். இந்த முறையான சீர்திருத்தம், இந்திய அரசியல் நிர்ணய சட்ட உணர்வோடு முற்றிலும் இணைந்திருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தப் பேட்டியில், அமித் ஷா மூன்று புதிய சட்டங்களான - பாரதிய நாகரிக் சுரக்ஷ (இரண்டாம்) சன்ஹிதா 2023; பாரதிய நியாயா (இரண்டாம்) சன்ஹிதா 2023; மற்றும் பாரதிய சாக்ஷ (இரண்டாவது) மசோதா 2023வின் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்த கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார்.
160 ஆண்டுகள் பழமையான குற்றவியல் நீதி அமைப்பில் முதல் முறையாக மறுசீரமைப்பு செய்யப்பட்டிருப்பதன் மூலம் நீதி அமைப்பிலிருந்த அடிமைத்தனப் போக்கு, பிரிட்டிஷ் காலனித்துவ மனநிலையின் அடிப்படைச் சுவட்டை மாற்றுவதில் மோடியின் கனவை நனவாக்கும் விதத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுப் படியாகும் என்றார் திரு அமித் ஷா.

