புதுடெல்லி: அதிமுகவின் தலைவரும் தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர், மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, தனது எக்ஸ் சமூக ஊடகத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், “எம்ஜிஆர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளம். தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர். அவரது சமூக நீதி, சிந்தனைத் திறன் கொண்ட படங்கள் திரையைத் தாண்டி மக்கள் மனதை வென்றன.
“ஒரு தலைவராக, முதல்வராக மக்கள் நலனுக்காக அயராது உழைத்தார். தமிழகத்தின் வளர்ச்சியில் நீங்காத தடம் பதித்தவர். அவரது பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது,” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக மக்களால் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என அன்போடு அழைக்கப்பட்டவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். இலங்கை கண்டி அருகில் உள்ள நாவலப்பிட்டியில் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி பிறந்தார்.
கடந்த 1977ல் தமிழக முதல்வராக பொறுப்பேற்றவர், 1987 வரை தொடர்ந்து 10 ஆண்டுகாலம் மூன்று முறை தமிழக முதல்வராகப் பதவி வகித்தார்.
முதல்வராக இருந்தபோது சத்துணவுத் திட்டம், ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு, பள்ளி மாணவர்களுக்கு இலவசச் சீருடை, காலணி, பற்பொடி வழங்கும் திட்டங்கள், முதியோருக்கு இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டம் உள்ளிட்ட நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்தியவர் எம்ஜிஆர்.