புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நிலவி வரும் கடும் பனி மூட்டம் காரணமாக, வழக்கமான நேரத்தை விடவும் 170க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. அதேபோல், டெல்லியில் இருந்து 20க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாகப் புறப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி இந்திராகாந்தி அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து கிளம்ப வேண்டிய 120 விமானச் சேவைகள் பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்டதாகவும் அவற்றில் 53 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் அவதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
பஞ்சாப், அரியானா, டெல்லி, சண்டிகர் உள்ளிட்ட வடமாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு பனிமூட்டம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், எங்கு பார்த்தாலும் புகைமூட்டம்போல் காட்சியளிக்கிறது.
குறிப்பாக, டெல்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் போர்வை போர்த்தியதுபோல் காணப்படுகிறது.
டெல்லியில் புதன்கிழமை (ஜனவரி 17) வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்ததால் கடும் குளிர் நிலவியது.
அதேபோல் டெல்லியில் இருந்து 20க்கும் மேற்பட்ட ரயில்களும் டெல்லி விமான நிலையத்துக்கு வழக்கமான நேரத்தைவிடவும் 170க்கும் மேற்பட்ட விமானங்களும் தாமதமாக வந்தன.

