கனடா செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது

கனடா செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது

1 mins read
8214bb05-b35b-49f9-a706-56367f8ee998
கனடாவுக்குப் படிக்கச் செல்லும் இந்திய மாணவர் எண்ணிக்கை குறைந்தது. - படம்: இணையம்

புதுடெல்லி: கனடாவுக்கும் இந்தியாவுக்கும் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக கனடாவுக்குப் படிக்கச் செல்லும் இந்திய நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 86 விழுக்காடு குறைந்துவிட்டதாக கனடா அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவுடனான உறவில் ஏற்பட்ட பாதிப்பு, இந்தியாவிலிருந்து அதிக விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் திறனை பாதியாகக் குறைத்துவிட்டது,” என்று மில்லர் கூறினார்.

கடந்த 2023 மூன்றாம் காலாண்டில் 108,940 இந்திய மாணவர்கள் கனடா சென்ற நிலையில், 2023 கடைசி மூன்று மாதங்களில் இந்த எண்ணிக்கை 14,910 ஆகச் சரிந்தது என்று அவர் கூறினார்.

அண்மைய ஆண்டுகளில் கனடாவின் அனைத்துலக மாணவர் எண்ணிக்கையில் இந்தியர்கள் அதிக விகிதத்தில் இருந்து வருகின்றனர். 2022ல் வழங்கப்பட்ட மாணவர் அனுமதியில் கிட்டத்தட்ட 41 விழுக்காட்டினர், அதாவது 225,835 பேர் இந்தியர்கள்.

“இரு நாடுகளுக்கு இடையிலான உறவு கசந்துபோனது, இந்திய மாணவர்கள் தங்குவதற்குக் கனடாவில் போதுமான அளவு வீடுகள் இல்லாதது, இங்குள்ள பல கல்வி நிலையங்களில் போதுமான கல்வி வசதிகள் இல்லாதது ஆகியவை மாணவர் எண்ணிக்கை சரிவுக்கான காரணங்கள்,” என்று தூதரக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இந்திய மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க கனடாவும் முயன்று வருகிறது. இந்த ஆண்டின் முதல் பாதியில் கனடாவிற்கு வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்