லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் பிருந்தாவனம் பகுதியில் புகழ்பெற்ற ஸ்ரீ ரெங்கநாதர் கோவில் உள்ளது.
இந்தக் கோவிலைச் சுற்றிலும் எப்போதும் அதிக அளவில் குரங்குகள் காணப்படும்.
கோவிலுக்குச் சாமி கும்பிட வரும் பக்தர்களின் பொருள்களை அவர்களிடம் இருந்து லாவகமாகப் பறித்துச் சென்றுவிடும். இதனால், பயத்துடன்தான் பக்தர்கள் சாமி கும்பிட வருவார்கள்.
இதுபோல் நடந்த ஒரு சம்பவம் குறித்த காணொளி இப்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
அதில், கட்டடத்தின் உயரத்தில் சில குரங்குகள் அமர்ந்து இருக்கின்றன. ஒரு குரங்கின் கையில் விலையுயர்ந்த ஐபோன் காணப்படுகிறது. அதனைத் திரும்பப் பெறுவதற்காக கைப்பேசியைப் பறிகொடுத்தவர் கீழே காத்திருக்கிறார்.
அவருக்கு உதவி செய்வதற்காக இன்னும் பலர் கீழே திரண்டு நிற்கின்றனர். ஏதேதோ செய்து கைப்பேசியை திரும்பப் பெற முயற்சி செய்கின்றனர்.
தங்களிடம் இருந்த பொருள்களை எடுத்து குரங்குகளை நோக்கி வீசுகின்றனர். எனினும், நீண்டநேரம் ஆகியும் ஐபோனைத் திரும்பப் பெற முடியவில்லை.
இறுதியில், ‘புரூட்டி’ குளிர்பானத்தைக் குரங்கை நோக்கி வீசியபோது, அதனை சரியாக ஒரு கையில் பிடித்துக்கொண்ட குரங்கு ஐபோனை கீழே போட்டு விடுகிறது.
தொடர்புடைய செய்திகள்
தரையில் நின்று கொண்டிருந்த ஆடவர் ஒருவர், கீழே விழுந்து நொறுங்க இருந்த ஐபோனை பாய்ந்து பத்திரமாகப் பிடித்துக்கொள்கிறார்.
இதுபற்றி விகாஸ் என்பவர் வெளியிட்டுள்ள காணொளியில், பிருந்தாவன குரங்குகள் ஒரு புரூட்டி குளிர்பானத்துக்காக ஐபோனை விற்றுவிட்டன எனப் பதிவிட்டு உள்ளார்.
இந்தக் காணொளியை லட்சக்கணக்கானோர் ரசித்துள்ளனர்.