ராணுவத்தைத் திரும்பப்பெறுவது குறித்து இந்தியா - மாலத்தீவு இடையே பேச்சுவார்த்தை

2 mins read
0a041376-4d42-4ce9-ab48-b115e3fe6fca
ஜெய்சங்கர், மூசா ஜமீர். - படம்: இந்து ஊடகம்

கம்பாலா: இருநாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீரை சந்தித்து வெளிப்படையாகக் கலந்துரையாடினார்.

இந்திய ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறுவது, மாலத்தீவில் நடந்து கொண்டிருக்கும் வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்துவது, சார்க் மற்றும் அணிசேரா அமைப்பின் ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் உரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அணிசேரா அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு உகாண்டா தலைநகர் கம்பாலாவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக அமைச்சர் ஜெய்சங்கர் கம்பாலா சென்றுள்ளார்.

இதனிடையே, வியாழக்கிழமை மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீரை சந்தித்து ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஜெய்சங்கர், “கம்பாலாவில் மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீரை சந்தித்துப் பேசினேன். இருநாட்டு உறவுகள் பற்றியும் வெளிப்படையாக உரையாடினோம்.

“மேலும் அணிசேரா அமைப்பு தொடர்பான விவகாரம் குறித்தும் விவாதித்தோம்,” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், மாலத் தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்திய ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறுவது, மாலத்தீவில் நடந்து கொண்டிருக்கும் வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்துவது, சார்க் மற்றும் அணிசேரா அமைப்பின் ஒத்துழைப்பு, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி, விரிவாக்குவது குறித்தும் நாங்கள் விவாதித்தோம்,” எனக் கூறியுள்ளார்.

தலைவர்களின் சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சின் செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், “மாலத்தீவுடனான நல்லுறவை மேம்படுத்த இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய ராணுவத்தினா் தொடா்பான விவகாரத்தில் தீா்வு காண இரு நாடுகளும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றன,” என்றாா்.

மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவம், மாா்ச் 15ஆம் தேதிக்குள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அதிபா் முகமது மூயிஸ் அண்மையில் கேட்டுக்கொண்டாா்.

இந்நிலையில், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை நடத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்