சுற்றுலா சென்றபோது துயரம்: படகு கவிழ்ந்து 16 பேர் பலி

வதோதரா: வதோதரா நகரை ஒட்டி அமைந்துள்ள ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் 14 பேரும் இரண்டு ஆசிரியர்களும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் உயர்மட்ட விசாரணையை நடத்தவும் 10 நாட்களுக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார் குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல்.

இதனிடையே, விபத்தில் சிக்கிய படகில் 27 மாணவர்கள் பயணம் செய்ததாக வதோதரா மாவட்ட ஆட்சியர் ஏ.பி.கோர் தெரிவித்துள்ளார். இதனால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

படகில் பயணம் செய்த மாணவர்களைத் தேடும் பணி தொடர்வதாக மாவட்ட நிர்வாகமும் உறுதி செய்துள்ளது.

வதோதரா நகரை ஒட்டி அமைந்துள்ள ஹார்ணி ஏரிக்கு நான்கு ஆசிரியா்கள் தலைமையில் பள்ளி மாணவா்கள் 27 பேர் வியாழக்கிழமை அன்று (ஜனவரி 18) சுற்றுலா சென்றனர்.

மாணவா்களும் ஆசிரியா்களும் ஒரே படகில் பயணம் செய்து ஏரியை சுற்றிப் பாா்த்தனா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்ததில், மாணவர்களும் ஆசிரியர்களும் நீரில் தத்தளித்தனா்.

அவா்கள் உதவி கேட்டு கூச்சலிட்டதை அடுத்து, அப்பகுதியில் இருந்தவா்கள் ஏரியில் குதித்து மாணவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

ஒரு சில மாணவர்களை மீனவர்கள் உயிருடன் மீட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், 14 மாணவர்களும் இரு ஆசிரியர்களும் உயிரிழந்தனர். எஞ்சியவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினரும் தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏரியின் அடிப்பகுதியில் சேறு இருப்பதால் மீட்புப் பணி தாமதம் அடைவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வதோதரா நகராட்சி நிலைக்குழுவின் தலைவர் ஷீத்தல் மிஸ்திரி கூறுகையில், “படகில் ஏறக்குறைய 35 பேர் இருந்தனர். ஒருவேளை படகில் ஏற்றக்கூடிய எடையின் அளவையும் தாண்டி அதிகளவு ஆட்களை ஏற்றியிருக்கலாம் என நினைக்கிறோம். இதனால், படகு சமநிலையை இழந்து கவிழ்ந்து விபத்து நடந்துள்ளது.

“முதல்கட்ட விசாரணையில் படகில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லை என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, “வதோதரா படகு விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். முதல்வர் விரைந்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் விசாரணைக்கு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்ய 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,” என்று கூறினார்.

“படகு விபத்தை அறிந்து வேதனை அடைந்தேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது,” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 பணமும் அரசு தரப்பில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், “பள்ளி நிர்வாகம் சுற்றுலாவிற்கு அனுமதி பெற்றுள்ளதா என்றும் பள்ளிக் குழந்தைகள் சவாரி செய்வதற்கு முன் படகில் பாதுகாப்புக் கருவிகள் உள்ளதா என சோதிக்கப்பட்டதா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!