சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் தேர்தலில் வெற்றிபெற நினைக்கிறது பாஜக: டெல்லி கல்வி அமைச்சர் விமர்சனம்

சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் தேர்தலில் வெற்றிபெற நினைக்கிறது பாஜக: டெல்லி கல்வி அமைச்சர் விமர்சனம்

2 mins read
bb9b62a2-ec49-453d-b42a-580c15a04b68
டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி.  - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: தேர்தலுக்கு முன்பு டெல்லி மக்கள் மத்தியில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்துவதற்காக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அழைப்பாணை அனுப்பப்படுவதாக டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி விமர்சித்துள்ளார்.

“சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜகவிற்குத் தைரியம் இருந்தால், அவர்கள் செய்த சாதனைகளை முன்வைத்து தேர்தலில் போட்டியிட வேண்டும்,” என்று அதிஷி மேலும் காரசாரமாகப் பேசியுள்ளார்.

டெல்லி அரசின் மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றஞ்சாட்டி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இதில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிந்துள்ளது.

இவ்வழக்கின் தொடர்பில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த இதுவரை நான்கு முறை அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இருப்பினும் கெஜ்ரிவால் இதுவரை அமலாக்கத்துறை முன்பு ஒரு முறை கூட விசாரணைக்கு முன்னிலையாகவில்லை.

இந்நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை வைத்து தேர்தலில் பாஜக வெற்றிபெற நினைப்பதாக டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “சில நாள்களுக்கு முன்பு அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு அழைப்பாணை அனுப்பியபோது, அதன் பின்னால் பாஜக இருப்பதாக நாங்கள் குற்றம்சாட்டினோம்.

“தற்போது பாஜக செய்தித்தொடர்பாளர் கௌரவ் பாட்டியாவும் அதை நிரூபித்துள்ளார். அமலாக்கத்துறையினர் கெஜ்ரிவாலை கைது செய்வார்கள் என்று அவர் கூறுகிறார்.

“அமலாக்கத்துறையினர் எடுத்துள்ள அடுத்த கட்ட நடவடிக்கைகள், உறுதி செய்யாத விஷயம் குறித்து பாஜகவிற்கு எப்படித் தெரியும்?

“உண்மையில் அழைப்பாணை அனுப்புமாறு அமலாக்கத்துறைக்கு பாஜகதான் வலியுறுத்துகிறது. இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்தியும் எந்த ஒரு ஆதாரமும் அவர்களுக்குக் கிடைக்காததால், தற்போது சட்டவிரோதமாக முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அழைப்பாணை அனுப்பப்படுகிறது. சிபிஐ, அமலாக்கத்துறையை வைத்து தேர்தலில் வெற்றிபெற பாஜக நினைக்கிறது,” என்று அதிஷி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, “தேர்தலுக்கு முன் என்னைக் கைது செய்வதே பாஜகவின் நோக்கம். இதன்மூலம் எனது பிரசாரத்தை தடுத்து விடலாம் என பாஜக நினைக்கிறது. அமலாக்கத்துறையை பாஜக இயக்குகிறது.

“எனக்கு அனுப்பப்பட்ட நான்கு அழைப்பாணைகளும் சட்ட விரோதம் என அமலாக்கத்துறைக்கு நான் பதில் அளித்துவிட்டேன். ஆனால், அதற்கு அமலாக்கத்துறை பதில் அளிக்கவில்லை. அரசியல் சதியின் கீழ் இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்படுகின்றன,” என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்