ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் மத்திய அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ளவுள்ளது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தொண்டர்களும் (ஜேஎம்எம்) பழங்குடியின மக்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதையடுத்து முதல்வர் ஹேமந்த் சோரனின் வீடு அமைந்துள்ள பகுதியில் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டு மூன்றடுக்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மூத்த சிறப்புக் காவல் கண்காணிப்பாளர் சந்தன் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஹேமந்த் மீது நில மோசடி தொடர்புடைய ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதையடுத்து அவரிடம் மத்திய அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணைக்கு ஜனவரி 16 முதல் 20ஆம் தேதிக்குள் முன்னிலையாக வேண்டும் என்று முதல் அமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜனவரி 13ஆம் தேதி அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு 20ஆம் தேதி தனது வீட்டில் வைத்து தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யலாம் என்று முதல் அமைச்சர் ஹேமந்த் சோரன் பதிலளித்திருந்தார்.
இதையடுத்து முதல்வரின் இல்லத்தில் விசாரணை மேற்கொள்ளும்போது, பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முதல்வரின் வீடு மற்றும் அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் மண்டல அலுவலகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் முதல்வர் இல்லத்திற்கு வெளியே தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
மேலும், விசாரணை முடியும் வரை முதல்வர் இல்லம் அருகே போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் (ஜே.எம்.எம்.) தலைவருமான ஹேமந்த்துக்கு முன்னதாக மத்திய அமலாக்கத்துறை விசாரணைக்கு முன்னிலையாகும்படி ஏழு முறை கடிதங்கள் அனுப்பியது. ஆனால் அதை அவர் பொருட்படுத்தவில்லை.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசாங்கம் தனது அரசாங்கத்தை சீர்குலைக்க மத்திய அமைப்புகளைப் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.