புதுடெல்லி: நடிகை ராஷ்மிகா மந்தனாவை டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாகச் சித்திரித்த காணொளி ஒன்று கடந்த 2023 நவம்பர் 6ஆம் தேதி சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டது.
அதுதொடர்பாக முக்கியக் குற்றவாளி என்று நம்பப்படும் ஒருவரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ராஷ்மிகா மந்தனாவுடன், நடிகைகள் ஆலியா பாட், காஜோல், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தொடர்பான டீஃப்பேக் காணொளிகள் வெளிவந்தன.
ராஷ்மிகா மந்தனா காணொளியைப் பகிர்ந்துகொண்ட பயனர்கள் பலரிடம் காவல்துறை கடந்த நவம்பர் மாதம் முதல் விசாரணை நடத்தி வருகிறது. இருந்தும் அந்தக் காணொளியைத் தயாரித்தவர் யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் டீப்ஃபேக் காணொளி தொடர்பாக முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஒருவரைக் கைது செய்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ள அந்த ஆடவரே இந்தக் காணொளியைத் தயாரித்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
தகவல் தொழில்நுட்பத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவோருக்கு எதிராகச் சட்டத்தை மேலும் கடுமையாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
டீப்ஃபேக் பிரச்சினை இப்போது பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. அதையடுத்து, சமூக ஊடகத் தளங்களின் நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

