போபால்: காப்பகத்தில் உள்ள 21 சிறார்களை அங்குள்ள ஊழியர்கள் சித்திரவதை செய்தது மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள இந்தூர் நகரில் தனியார் அறக்கட்டளை நடத்தி வரும் குழந்தைகள் காப்பகம் உள்ளது.
மத்தியப் பிரதேச மாநில குழந்தைகள் நலக் குழுவினர் அண்மையில் இந்தக் காப்பகத்தில் திடீர் ஆய்வை மேற்கொண்டனர். அப்போதுதான் காப்பகத்திலுள்ள சிறார்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளானது தெரிய வந்தது.
இதையடுத்து ஆய்வு நடத்திய அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன் பின்னர் விசாரணை மேலும் தீவிரமடைந்தது.
சிறு தவறுகளுக்குக்கூட சிறார்களை தலைகீழாகத் தொங்கவிடுவது, இரும்புக் கம்பியால் சூடு போடுவது, ஆடைகளைக் களைந்து புகைப்படம் எடுப்பது எனக் காப்பகத்தில் இருந்த பலர் அடாவடியாக செயல்பட்டுள்ளனர்.
அண்மையில் நான்கு வயது குழந்தையை இரண்டு நாள்கள் குளியலறையில் அடைத்து வைத்து உணவளிக்காமல் சித்திரவதை செய்ததும் அம்பலமாகி உள்ளது.
காப்பக ஊழியர்கள் அடுப்பில் கார மிளகாயைப் போட்டு அதை முகர்ந்து பார்க்குமாறு சிறார்களை வற்புறுத்தி உள்ளனர். இதையடுத்து ஐந்து ஊழியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காப்பகம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

