தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

1 mins read
f5ebaeb8-439a-4415-bf93-ba64a9211346
பில்கிஸ் பானு. - படம்: ஊடகம்

புதுடெல்லி: பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகள் உடனடியாக காவல்துறையிடம் சரணடைய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சரணடைவதற்கு மேலும் கால அவகாசம் தர இயலாது என நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் ஏற்படுத்திய பாதிப்புகளின் தாக்கம் இன்னும் குறையவில்லை.

அச்சமயம் கர்ப்பிணிப் பெண் பில்கிஸ்பானு என்பவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

21 வயதான அவரைச் சீரழித்தவர்கள், பின்னர் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரை படுகொலை செய்தனர். இது தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2008ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது.

இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் 11 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்வதாக அறிவித்தது குஜராத் மாநில அரசு.

அதன்படி, 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி 11 குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து பில்கிஸ்பானு உள்ளிட்ட சில தரப்பினர் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

இம்மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகள் உடனடியாக சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது.

குற்றவாளிகள் சரணடையாமல் இருக்க குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களை நியாயப்படுத்த எந்த தகுதியும் இல்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டினர்.

குறிப்புச் சொற்கள்