லக்னோ: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
பிரதமர் மோடி உள்ளிட்ட ஏராளமான முக்கியப் பிரமுகர்கள் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளதால் அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ராமர் கோயில் முழுவதும் வண்ணப் பூக்களாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் பிரம்மாண்ட திரைகள் அமைக்கப்பட்டு ராமாயணக் கதைகள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் பூக்கள், விளக்குகளால் வீடுகளையும் அழகுபடுத்தியுள்ளனர்.
ஒட்டுமொத்த அயோத்தி நகரமும் பாதுகாப்புப் படையின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் கோயிலைச் சுற்றி வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
கோயில் நுழைவாயில் பகுதியில் 1,400 வீரர்கள் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர். கோயில் விழாவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோர் மீதும் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளியூர், வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் அயோத்தி நகரில் குவிந்து வருவதையொட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கூடங்களில் 24 மணி நேரமும் இலவச உணவு விநியோகிக்கப்படுகின்றன.
கோவில் விழாவில் 2,000 சாதுக்கள், பல்வேறு துறைகளைச் சார்ந்த 5,000 பிரமுகர்களுக்கு குடமுழுக்கு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, கிரிக்கெட் வீரர் சச்சின், நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்ட 506 பேர் மிக முக்கிய பிரமுகர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

