புதுடெல்லி: பில்கிஸ் பானு வழக்குத் தொடர்பில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் 11 பேரும் குஜராத் மாநிலம், பஞ்ச மஹாலில் உள்ள கோத்ரா சிறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சரணடைந்தனா்.
குற்றவாளிகள் சிறை திரும்ப கூடுதல் அவகாசம் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து ஞாயிற்றுக்கிழமைக்குள் சரணடையுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவா்கள் சரணடைந்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு, 21 வயது கர்ப்பிணியான பில்கிஸ்பானு என்பவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
மேலும், அவரின் குடும்பத்தைச் சோ்ந்த ஏழு போ் கொலை செய்யப்பட்டனா்.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேருக்கு கடந்த 2008ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அவா்களின் தண்டனைக் குறைப்பு குறித்து பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், குற்றவாளிகள் 11 பேரையும் கடந்த 2022ஆம் ஆண்டு குஜராத் அரசு சிறையிலிருந்து விடுவித்தது.
இதையடுத்து பில்கிஸ் பானு உட்பட பல்வேறு அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.
இந்நிலையில், குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து அவா்கள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சிறையில் மீண்டும் அடைக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், அவா்கள் சிறைக்குத் திரும்ப கூடுதல் அவகாசம் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து ஞாயிற்றுக்கிழமைக்குள் சரணடையுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, குற்றவாளிகள் 11 பேரும் கோத்ரா சிறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சரணடைந்தனா்.

