இந்தியா-இலங்கை இடையே 23 கிலோ மீட்டர் கடல் பாலம் குறித்த சாத்தியக்கூறு ஆய்வு

2 mins read
b774a35c-7d70-4bea-a8ce-3929dbca5934
பாலத்தின் மாதிரி படம். - படம்: இந்திய ஊடகம்

தனுஷ்கோடி: இந்தியாவின் தனுஷ்கோடியை இலங்கையுடன் இணைக்கும் கடல் பாலம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவுபடுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை 23 கிலோ மீட்டர் கடல் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை இந்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்றிருந்தபோது, ​​திருகோணமலை, கொழும்பு துறைமுக பகுதிகளுக்கு இந்தியர்கள் எளிதாக வந்து செல்லும் வழிமுறைகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இந்தியாவும் இலங்கையும் ஒப்புக்கொண்டன.

அதைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவு அமைச்சு இது தொடர்பாக மற்ற அமைச்சுகள், அரசு நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் உள்ளவர்கள் கூறுகையில்,

“ரணில் வருகையின்போது பால், எண்ணெய், மின்சாரம், கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இரு நாடுகளையும் இணைக்கும் கடல் பாலம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டன. இந்த நீண்ட கடல் பாலத்திற்கு பெரும் நிதி தேவைப்படும் என்றாலும் இந்தத் திட்டத்தால் இரு தரப்பும் மிகப் பெரியளவில் பலன் பெறும். இது இருதரப்பு வணிகத்திற்கும் ஒரு வரமாகவே இருக்கும். அதற்கு, அரசு தொழில்நுட்ப, பொருளியல், சுற்றுச்சூழல் அம்சங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டும்” என்று தகவல் அறிந்த வட்டாரம் குறிப்பிட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி கூறியது. இரு நாடுகளையும் கடல் பாலம் மூலம் இணைப்பது குறித்துக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே கோரிக்கை இருக்கிறது. கடந்த 2015 டிசம்பரில், மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, இரு நாடுகளையும் இணைக்கும் வகையில் வாகனங்கள், ரயில் செல்லக் கூடிய பாலத்தைக் கட்டும் திட்டம் உள்ளதாகக் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்