சண்டிகர்: அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டையையொட்டி இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், சிறப்பு பூசைகள் நடைபெற்றன.
அரியானா மாநிலத்திலும் கோயில்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அந்த வகையில் அரியானாவின் பிஹ்வானி நகரில் ராம்லீலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஹரிஷ் மேதா என்ற நபர் அனுமன் வேடமணிந்திருந்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் ராமர் வேடமணிந்த நபரின் காலை அனுமன் வேடமணிந்திருந்தவர் வணங்குவது போன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் நிகழ்ச்சியின் நடுவே ஹரிஷ் மேதா மேடையில் நின்றுகொண்டிருந்த ராமர் வேடமணிந்த நபரின் கால் அருகே விழுந்ததாக தமிழக நாளேடான தினத்தந்தி வெளியிட்ட தகவல் தெரிவித்தது.
இது நிகழ்ச்சியின் ஒரு பகுதி என நினைத்த அருகில் இருந்தவர்கள் ஹரிஷ் மேதாவை எழுப்பாமல் நாடகத்தை தொடர்ந்தனர்.
சில நிமிடங்களாக ஹரிஷ் மேதா மேடையில் விழுந்துகிடந்ததால் அதிர்ச்சியடைந்த சிலர் அவரை எழுப்ப முயன்றனர்.
அப்போது ஹரிஷ் மேதா மயங்கிய நிலையில் இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஹரிஷ் மேதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்தச் சம்பவத்தை வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

